Posts

பிறந்தகத்துச் செழிப்பும் புகுந்தகத்து வறுமையும் – போதனார் (நற்றிணை: 110)

தன்னை மணந்த கணவனின் குடி வறுமையுற்றிருக்கும் தருணத்தில், தலைவி ஒருபொழுது உணவு உண்ணாமல் மற்றொருபொழுது மட்டுமே உண்கிறாள். பிறந்தவீட்டில் தந்தை அளித்த செல்வச்சிறப்பு மிக்க உணவு தற்போது இல்லையே என்ற கலக்கம் அவள் மனதில் சிறுதும் இல்லை. இது மாபெரும் வியப்புத் தருகிறது. தலைவியின் பிறந்தகத்தில் வளர்ப்புத் தாயரான செவிலிமார் ஒளிரும் பொற்கலத்தில் பாலுணவிட்டுத் தலைவிக்கு ஊட்ட முயலுவர். அந்தப் பாலுணவு, தேன்கலந்தது போன்று நல்ல சுவையுள்ளதாக இருக்கும். உண்பதற்கு இனியதாகவும் வெண்மையானதாகவும் இருக்கும். தலைவி பாலுணவை உண்ணாது அடம்பிடிப்பாள். செவிலியர் ஒருகையில் பாலுணவை வைத்திருப்பர். மற்றொரு கையில் பூச்செடியிலிருந்து பறித்தக் கோலை எறிவது போன்று காட்டித் தலைவியை உண் என்று மிரட்டுவர். தலைவி உண்ண மறுத்து ஓட்டம்பிடிப்பாள். பாய்ந்து ஓடும்போது, முத்துப்பரல்களை உள்ளீடாகக் கொண்ட அவள் கால்சிலம்பு ஒலிக்கும். வேகமாக ஓடிச்சென்று வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்குக்கீழ் நிற்பாள். நரைத்த கூந்தலையுடைய வயதான செவிலியர் தலைவியைப் பின்தொடந்து ஓட இயலாமல் திணறிச் செல்வர். சென்று நீ உணவு உண்ணவேண்டும் என வே...